ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இறுதி போட்டிக்கு கொலம்பியா, ஸ்பெயின் அணிகள் தகுதி
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் மோதின.
பனாஜி,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் ஜெர்மனி, ஸ்பெயின், நைஜீரியா, கொலம்பியா அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தன. அந்த வகையில் கோவாவில் இன்று மாலை நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் மோதின.
இரண்டு அணிகளும் வழங்கப்பட்ட இறுதி நிமிடம் வரை கோல் அடிக்காத காரணத்தால் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக பெனால்டி சூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கொலம்பியா அணி 6-5 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 2-வது பாதியும் பரபரப்பாக செல்ல, கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) ஸ்பெயின் வீராங்கனை லூசியா கோரல்ஸ் அந்த அணியின் முதல் கோலை அடித்தார். பின்னர் யாரும் கோல் அடிக்காத நிலையில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம் அக்டோபர் 30 அன்று நடைபெறும் இறுதி போட்டியில் கொலம்பியா- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.