ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.

Update: 2024-07-14 00:07 GMT

Image Courtesy : @EURO2024

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் கடந்த மாதம் (ஜூன்) 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதில் 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

அல்வாரோ மொராட்டா தலைமையிலான ஸ்பெயின் அணி லீக் சுற்று உள்பட 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. அந்த அணியின் தாக்குதல் மற்றும் தடுப்பு ஆட்டம் அபாரமாக இருக்கிறது. இளம் வீரர் லாமின் யாமல், ரோட்ரி, நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஸ்பெயின் அணி 4-வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, 2 டிரா கண்டது. ரவுண்ட் 16-ல் சுலோவக்கியாவையும், கால்இறுதியில் சுவிட்சர்லாந்தையும், அரைஇறுதியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 2-வது முறையாக இறுதி சுற்றுக்குள் அடியெடித்து வைத்தது. அந்த அணியில் கேப்டன் ஹாரி கேன், கோப்பி மைனோ, பில் போடென் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

1966-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு இங்கிலாந்து அணி பெரிய பட்டம் எதையும் வெல்லவில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து 14 ஆட்டங்களிலும், ஸ்பெயின் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

இந்த கால்பந்து திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.72 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். போட்டி கட்டணம் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று ஆகியவற்றில் பெற்ற வெற்றிகளையும் சேர்த்து ஸ்பெயின் அணி மகுடம் சூடினால் ரூ. 256 கோடியை அள்ளும். இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றால் ரூ.247 கோடியை தட்டிச் செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்