2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கியது இந்தியா
2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெறும் முயற்சியில் இருந்து இந்திய கால்பந்து சம்மேளனம் பின்வாங்கியது.
புதுடெல்லி,
19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கால்பந்து சம்மேளனங்கள் ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தன.
இந்த முயற்சியில் இருந்து ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த அக்டோபர் மாதம் ஒதுங்கி விட்டன. இதனால் இந்தியா, சவுதி அரேபியா இடையே நேரடி போட்டி நிலவியது. ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்து பக்ரைனில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெறும் முயற்சியில் இருந்து இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று பின்வாங்கியது.
தற்போதைய நிலைமையில் பெரிய போட்டிகளை நடத்துவதை விட கால்பந்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை எல்லா மட்டங்களில் உருவாக்குவதிலும், இளைஞர்களின் ஆட்டத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் கவனம் செலுத்த இருப்பதாக இந்திய கால்பந்து சம்மேளனம் கூறியுள்ளது.