விவசாயிகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் ராமன் தகவல்
விவசாயிகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையினால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை எளிதாக கையாளும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் விதை ஆய்வு, சான்றளிப்பு அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளும், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், விளைபொருள் விற்பனை மற்றும் உரிய வியாபாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும், பொருளட்டு கடன் பெறும் வழிமுறைகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடங்கள் மற்றும் வழிமுறைகள், குளிர்பதன கிடங்கு வசதி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என அனைத்து வித ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டும் அலுவலக நேரத்தில் (காலை 10 முதல் மாலை 6 மணி வரை) 0427-2417520 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது