நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் - வீரர்களை பாராட்டிய காவ்யா மாறன்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Update: 2024-05-28 05:44 GMT

image courtesy: X (Twitter)

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும்.

நடப்பு சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆப் போட்டிகளில் அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில் இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் அணி தோல்வி அடைந்ததை அடுத்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஐதராபாத் இம்முறை இறுதிப்போட்டிக்கு வரும் அளவுக்கு அட்டகாசமாக விளையாடியதாக அதன் உரிமையாளர் காவ்யா மாறன் பாராட்டியுள்ளார். போட்டி முடிந்த பின்னர் வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற காவ்யா மாறன் பேசியதாவது,

நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். அதை சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன். உண்மையாக நீங்கள் எப்படி டி20 கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை மாற்றி மறுவரையறை செய்துள்ளீர்கள். அதனால் அனைவரும் நம்மைப் பற்றி பேசுகின்றனர். இறுதிப்போட்டி நடைபெற்ற நாள் நமக்கு சரியாக அமையவில்லை. ஆனால் உண்மையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நன்றாக விளையாடினீர்கள்.

மிக்க நன்றி. கடந்த வருடம் நாம் கடைசி இடத்தைப் பிடித்தோம். இந்த வருடம் உங்களுடைய திறமையின் காரணமாக ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் நம்மை பார்க்க வந்தார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்மைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர்.

கொல்கத்தா கோப்பையை வென்றாலும் அனைவரும் நாம் விளையாடிய ஸ்டைலை பற்றி பேசுகின்றனர். அதற்காக நன்றி. சோகமாக இருக்க வேண்டாம். ஏனெனில் நாம் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். இது மற்றொரு சாதாரண போட்டி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்