அந்த இரண்டு இளம் வீரர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக மாத்த போறோம் - இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி
அந்த இரண்டு இளம் வீரர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக மாத்த போறோம் என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் கூறியுள்ளார்.
புளோரிடா,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. 4வது வரிசை பேட்ஸ்மேன் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஸ்ரேயஸ் அய்யர் காயத்தில் இருந்து குணமடையாததால் 4வது இடத்தில் யாரை இறக்கலாம் என்று அணி நிர்வாகம் தீவிர ஆலோசனையில் உள்ளது.
ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறும்போது பகுதி நேர பவுலர்களாக மாறி கணிசமான ஓவர்கள் வீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆனால் தற்போதைய அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் அவ்வாறு பந்து வீசாதது ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய இளம் வீரர்கள் திலக் வர்மா மற்றும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக மாற்ற முடிவெடுத்துள்ளதாக பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
உங்களுக்கு யாராவது ஒருவர் சில கணிசமான ஓவர்களை வீசினால் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அண்டர்-19 அளவிலிருந்து பந்து வீசுவதை நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களால் இந்த அளவிலும் அந்த வேலையை செய்ய முடியும்.
எனவே அது போன்ற வாய்ப்புகளில் அவர்களை கொண்டிருப்பது நமக்கு நல்ல சாதகத்தை ஏற்படுத்தும். தற்போது அதற்கான வேலைகளை நாங்கள் துவங்கியுள்ளதால் விரைவில் அவர்கள் பந்து வீசுவதை நம்மால் பார்க்க முடியும். இருப்பினும் அதற்கு சற்று காலம் தேவைப்படும். ஆனாலும் விரைவில் அவர்கள் குறைந்தது ஒரு ஓவர் வீசுவதையாவது நீங்கள் பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.