உலகக்கோப்பை தகுதிச்சுற்று; சரிவில் இருந்து மீட்ட டி சில்வா...நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 213 ரன் சேர்ப்பு...!

இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 93 ரன்கள் எடுத்தார்.

Update: 2023-06-30 10:43 GMT

Image Courtesy: @ICC

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-3 இடங்களை பிடித்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'பி' பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

சூப்பர்சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் தங்கள் பிரிவில் இருந்து வந்த அணிகளை ஏற்கனவே லீக்கில் வீழ்த்தி இருந்தால் அதற்குரிய புள்ளி சூப்பர்சிக்ஸ் சுற்றில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த வகையில் ஜிம்பாப்வே, இலங்கை தலா 4 புள்ளிகளுடன் சூப்பர்சிக்சை கம்பீரமாக அடைந்து இருக்கின்றன. சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியை எட்டுவதுடன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.

இதில் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக நிசாங்கா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினர். இதில் நிசாங்கா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

இதையடுத்து கருணாரத்னேவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் மெண்டிஸ் 10 ரன், அடுத்து வந்த சதீரா சமரவிக்ரமா 1 ரன், அசலாங்கா 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கருணாரத்னே 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 67 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து டி சில்வா, தசுன் ஷனகா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் ஷனகா 5 ரன், அடுத்து வந்த ஹசரங்கா 20 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து தீக்ஷனா டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய டி சில்வா அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இலங்கை அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 93 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்