பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்யில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

Update: 2023-02-18 00:16 GMT

Image Courtesy: AFP 

கெபேஹா,

10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) கெபேஹா நகரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்தை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.

இந்திய அணி முந்தைய லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளை துவம்சம் செய்தது. இதேபோல் இங்கிலாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அயர்லாந்தை தோற்கடித்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான இந்த மோதல் இந்தியாவுக்கு நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணியினரும் வரிந்துகட்டுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 20 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 5 தடவை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.

இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மெக் லானிங் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை (ஏ பிரிவு) சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்