பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Update: 2024-10-11 17:58 GMT

Image Courtesy : @AusWomenCricket

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முனீபா அலி 7 ரன்களிலும், சிட்ரா அமீன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சதாப் சமாஸ் 3 ரன்களில் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிகபட்சமாக அந்த அணியில் அலியா ரியாஸ் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் கேப்டன் அலிசா ஹீலி களமிறங்கினர். இதில் பெத் மூனி 15 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அலிசா ஹீலி 37 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த எலிஸ் பெர்ரி 22 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்