பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்...!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும். பெண்கள் பிரிமீபர் லீக்கில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஆட உள்ளன. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மும்பை கேப்டனாகவும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பெங்களூரு கேப்டனகாவும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் யார் கைப்பற்றுவார் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.