மகளிர் ஆசிய கோப்பை: ஷபாலி வர்மா அதிரடி... நேபாள அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 81 ரன்கள் குவித்தார்.
தம்புல்லா,
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வழக்கமான கேப்டனான ஹர்மன்பிரீத் கவுருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா - ஹெமலதா இணை சிறப்பாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஹெமலதா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா நேபாள பந்துவீச்சை சிதறடித்தார். அரைசதம் அடித்த அவர், அதன்பின்னும் அதிரடியில் பட்டையை கிளப்பினார்.
வெறும் 48 பந்துகளில் 81 குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (28 ரன்கள் 15 பந்துகள்) அதிரடியாக விளையாட இந்தியா வலுவான இலக்கை எட்டியது. முடிவில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக சீதா ராணா மகர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி நேபாளம் களமிறங்க உள்ளது.