நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய வில்லியம்சன்

நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய வில்லியம்சன், மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்தார்.

Update: 2024-06-19 03:44 GMT

Image Courtesy: @ICC

வெல்லிங்டன்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் குரூப் சி-யில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணி (2 வெற்றி, 2 தோல்வி கண்டு) லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து கேன் வில்லியம்சன் நியூசிலாந்தின் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், நியூசிலாந்து கிரிக்கெட்டின்  எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்க தயாராகவுள்ளேன். வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன்.

அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்