டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் - வேகப்பந்து வீச்சாளர்

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.

Update: 2024-01-29 12:40 GMT

image courtesy; AFP

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் சமீப காலமாக இந்திய அணியில் விளையாடாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்த தொடர்களை தவற விட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தீபக் சாஹர் இது குறித்து பேசுகையில்,'எனது தந்தைதான் எனக்கு எல்லாவற்றை விட முக்கியம். எனவே அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்திய அணியில் இருந்து வெளியேறினேன். எனது தந்தை மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருக்கும்போது வெளிநாடு சென்று விளையாடினால் நான் ஒரு நல்ல மகனே கிடையாது.

எனவே இந்திய அணியில் இருந்து வெளியேறி 25 நாட்கள் அவருடனே தங்கி இருந்தேன். தற்போது எனது தந்தை நல்ல உடல் நிலையை எட்டியுள்ளார். நான் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று நல்ல பயிற்சியையும் மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி உள்ளேன். அடுத்து என்னுடைய இலக்கே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான். ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வாய்ப்பினை பெறாத நான் இம்முறை நிச்சயம் அந்த வாய்ப்பை எட்டி பிடிப்பேன்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்