வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை..? ரசல் விளக்கம்

தன்னை போன்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் பணம் ஒரு பொருட்டல்ல என்று ரசல் கூறியுள்ளார்.;

Update:2024-08-15 17:33 IST

image courtesy: AFP

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அந்த காலத்தில் சாம்பியன் அணியாக வலம் வந்தது. அந்தக் காலகட்டங்களில் பல வேகப்பந்து வீச்சாளர்களும் விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிறைந்திருந்தனர். அதனால் அந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை எளிதில் வீழ்த்தி அசத்தியது.

இருப்பினும் அவர்களுடைய ஓய்வுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் கூட வெல்ல முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் திண்டாட்டமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கவே படுகிறது.

அதே சமயம் பிராவோ, பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், சுனில் நரைன் போன்ற தரமான வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை அந்த அணியின் வாரியத்தால் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை புறக்கணித்து ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் பணத்துக்காக விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இந்நிலையில் தன்னை போன்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் பணம் ஒரு பொருட்டல்ல என்று ஆண்ட்ரே ரசல் கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் இல்லாமலேயே டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக ரசல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பணம் ஒரு முக்கிய பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை. உலகம் முழுவதிலும் ஏராளமான டி20 லீக் தொடர்கள் நடைபெறுகிறது. அதனால் சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இல்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக என்னுடைய உடல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் மற்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை நான் ஆவலுடன் பார்ப்பேன்.

குறிப்பாக அவர்கள் பவுண்டரி அடிப்பதை பார்ப்பேன். உங்கள் நாட்டுக்கு வெளியே ஒப்பந்தம் கிடைக்கும்போது அதை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் அனைவரும் பெரிய இடத்தில் அசத்த விரும்புவார்கள். எனவே அந்தப் பெரிய வாய்ப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்தால் இளம் வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். எனவே அதற்கு பணம் மட்டும் காரணம் என்று நான் நினைக்கவில்லை" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்