கிரிக்கெட் கெரியரில் மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்..? - பும்ரா பதில்

பும்ராவிடம் உங்களுக்கு மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Update: 2024-08-30 07:55 GMT

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

குறிப்பாக தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். அதனால் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார். மேலும் அவரை வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.

இந்நிலையில் சென்னையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது உங்களுடைய கெரியரில் உங்களுக்கே சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு யாருடைய பெயரையும் சொல்லாத பும்ரா சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இதற்கு நான் நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் உண்மையில் யாரும் எனக்கு மேல் இருப்பதை நான் விரும்பவில்லை. கண்டிப்பாக நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த முடியாது என்று நான் எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்க வேண்டும். என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளை கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பதுபோல் நினைக்க வேண்டியதில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்