'இந்தியாவை இதற்கு முன் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் தோற்கடிப்போம்'- வான் டெர் டுசென்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-11-02 10:34 GMT

image courtesy; twitter/ @ICC

கொல்கத்தா,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ( புதன்கிழமை) நடைபெற்ற போட்டியில் வலுவான நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா டி காக் (114) மற்றும் வான் டெர் டுசென் (133) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.5 ஓவரில் 167 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

மேலும் தென் ஆப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அடுத்ததாக வரும் 5ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்தியாவை இதற்கு முன் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென்னாப்பிரிக்க வீரர் வான் டெர் டுசென் சவாலை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து  அவர் பேசியது பின்வருமாறு;- "இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய போட்டியாகும். இந்திய அணியில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. குறிப்பாக அவர்களிடம் சிறந்த பவுலிங் அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசை இருப்பதால் அனைத்தும் பூர்த்தியடைந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செய்ய விரும்புவதை செய்தால் எங்களால் வலுவான நிலையை எட்ட முடியும் என்பதை அறிவோம். கண்டிப்பாக அந்த ஆட்டத்தில் மிகப்பெரிய சவாலும் அழுத்தமும் இருக்கும். நாங்களும் அதை தான் எதிர்பார்க்கிறோம். இதற்கு முன் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி அவர்களை தோற்கடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்