10 -10 ரன்களாக பிரிச்சு ஆடினோம்; இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பின் துருவ் ஜூரெல் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2024-02-26 09:58 GMT

Image Courtesy: AFP

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 52 ரன்னுடனும், துருவ் ஜூரெல் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் சிறப்பாக பேட்டிங் செய்த துருவ் ஜூரெல் (90 ரன் மற்றும் 39 ரன்) ஆட்ட நாயகன் விருது வென்றார். இதையடுத்து இந்த போட்டிக்கு பின் துருவ் ஜூரெல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் நான் விளையாடுகிறேன். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு ரன்கள் தேவைப்பட்டது. எனவே கடைசி வரை பேட்டிங் செய்தால் முக்கிய ரன்களை எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக நான் போட்ட பார்ட்னர்ஷிப்பில் சேர்ந்து பேட்டிங் செய்தவர்களுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும்.

பந்தை பார்த்து அடித்த நான் அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் கில்லுடன் நன்றாக பேசி விளையாடினேன். குறிப்பாக நாங்கள் இலக்கை 10 ரன்கள் கொண்ட செட்டாக பிரித்து அதை துரத்துவதற்கான பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்