பெங்களூருவை வீழ்த்த திட்டங்கள் வைத்துள்ளோம்..அதை சமாளிக்கவில்லை என்றால்... - பிராவோ பேட்டி
பெங்களூருவை வீழ்த்துவதற்கு திட்டங்களை வைத்திருப்பதாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன
இந்நிலையில் பெங்களூரு அணியை வீழ்த்துவதற்கு திட்டங்களை வைத்திருப்பதாக சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:-
"நீங்கள் எதிரணியை மதிக்க வேண்டும். அந்த வகையில் பெங்களூரு அணியை நாங்கள் மதிக்கிறோம். ஒரு அணியாக நாங்கள் அதற்கு முழுமையாக தயாராகி நல்ல திட்டங்களை வைத்துள்ளோம். ஆர்சிபி எங்களுடைய திட்டத்தை முறியடிக்க முயற்சிக்க வேண்டும். அதை செய்தால் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள். இல்லையென்றால் இங்கிருந்து வெளியேறி அடுத்த வருடம் விளையாட வருவார்கள். எங்களுடைய திட்டத்தை வெளியிட விரும்பவில்லை.
ஆனால் கடந்த வருடமும் இந்த வருடமும் நாங்கள் இளம் பவுலர்களை வைத்து ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகிறோம். டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் பவுலிங் மிகவும் முக்கியம். பெரும்பாலான தருணங்களில் அதுதான் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும். வானிலை எங்களுடைய கட்டுப்பாட்டில் கிடையாது. எனவே எங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை கொண்டு வர நாங்கள் முயற்சிக்கவில்லை. இது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மற்றொரு போட்டியாகும். அதில் ஒரு நல்ல அணிக்கு எதிரான சவாலை நாங்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறோம்" என்று கூறினார்.