உலகக்கோப்பையை ராகுல் டிராவிட் கையில் ஏந்துவதை பார்ப்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

உலகக்கோப்பையை ராகுல் டிராவிட் கையில் ஏந்துவதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-30 08:33 GMT

டெல்லி,

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

2007ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து, டி20 உலகக்கோப்பை இந்திய வீரர்களிடம் வழங்கப்பட்டது. கோப்பையை கையில் வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்ற வீரர்களுடன் கொண்டாடினார். பின்னர், உலகக்கோப்பையை விராட் கோலி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கொடுத்தார். உலகக்கோப்பையை கையில் வாங்கிய டிராவிட் மகிழ்ச்சி மிகுதியில் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வீரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதேவேளை, உலகக்கோப்பையை ராகுல் டிராவிட் கையில் ஏந்துவதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ராகுல் டிராவிட்டின் சிறப்பான பயிற்சி பயணம் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை செதுக்கியுள்ளது. அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, யுக்தி, சரியான திறமையை வளர்ப்பது அணியை மாற்றியுள்ளது.

சிறந்த பங்களிப்புகளுக்காகவும், தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. உலகக்கோப்பையை ராகுல் டிராவிட் கையில் ஏந்துவதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் எனக்கு மகிழ்ச்சி

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்