அந்த இளம் வீரரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு என்னை பார்ப்பது போன்றே உள்ளது - யுவராஜ் சிங்
தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் ரிங்கு சிங். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமான அயர்லாந்து தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான காலிறுதியில் சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவிய அவர் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலுமே அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போதுள்ள இந்திய அணியில் ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பார்ப்பதற்கு தன்னை பார்ப்பது போன்று இருப்பதாக யுவராஜ் சிங் பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : ''தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார். மேலும் அவரது ஆட்டத்தை பார்க்கும்போது என்னுடைய ஆட்டத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏனெனில் அந்த அளவிற்கு அவர் எந்த நேரத்திலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்.
மேலும் எப்படி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஆட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அழுத்தமான சூழலில் கூட அவரது நேர்த்தியான பேட்டிங் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி அவர் நமக்காக பின்வரிசையில் களமிறங்கி போட்டிகளையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கிறார்.
எனவே தற்போது அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து அவரை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. நிச்சயம் அவரிடம் உள்ள திறமைக்கு இன்னும் அவரால் பல தூரம் இந்திய அணிக்காக பயணிக்க முடியும். என்னை பொறுத்தவரை ரிங்கு சிங் நம்பர் 5 அல்லது 6 வது இடத்தில் களமிறங்கி இந்திய அணியின் சிறந்த பினிஷராக திகழ முடியும்'' என்றார்.