டி20 உலகக்கோப்பை: ரோகித் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - வாசிம் ஜாபர்

ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-29 15:57 GMT

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலியை களமிறக்குமாறு சவுரவ் கங்குலி போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். ஏனெனில் ஐ.பி.எல். தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று தற்போது நல்ல பார்மில் விராட் இருக்கிறார். எனவே ஆரம்பத்திலேயே ரோகித் - விராட் ஆகிய ஜோடி இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் 3, 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். நாம் பெறும் துவக்கத்தை வைத்து ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 மற்றும் 4-வது இடத்தில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேட்டிங் செய்யலாம். ஏனெனில் ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். எனவே 4வது இடத்தில் அவர் விளையாடுவது பிரச்சினையாக இருக்காது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்