விராட் கோலியின் 10-15 நிமிட அறிவுரை என்னுடைய பேட்டிங்கில் நிறையவே உதவி செய்திருக்கிறது - ரியான் பராக்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-23 07:49 GMT

Image Courtesy: AFP

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரியான் பராக் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியிலும் உள்ளார். கடந்த சில சீசன்களாக ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய மோசமான ஆட்டத்தாலும், குறைந்த அளவிலேயே ரன்களை குவித்து வந்ததாலும் பலராலும் விமர்சிக்கப்பட்ட பராக் இந்த வருடம் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக அணியில் தக்க வைத்து நம்பிக்கை அளித்து வந்தது. இந்த ஆண்டு நான்காவது வீரராக களம் இறங்கும் ரியான் பராக் அதிரடியில் அசத்தி வருகிறார். இந்நிலையில்  கிரிக்கெட்டில் மோசமான நிலையில் இருந்து மேம்பட்டு சிறப்பாக செயல்படுவதற்கு யாரெல்லாம் காரணம் என்பது குறித்து பராக் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது,

என்னுடைய ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது சீசனில் நான் சரியான நிலையில் இல்லை. என்னுடைய பார்ம் அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்போது எனக்கு விராட் கோலியிடம் சென்று 10 முதல் 15 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அவர் அவருடைய அனுபவத்தின் வாயிலாக கற்றுக் கொண்ட பல விசயங்களை எனக்கு அறிவுரையாக கூறியிருந்தார். அது என்னுடைய பேட்டிங்கில் நிறையவே உதவி செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதே போன்று தோனி சி.எஸ்.கே அணியின் விக்கெட் கீப்பராக இருந்தபோது நான் அந்த அணிக்கு எதிராக விளையாடிய உணர்வு அதிசயமானது. உண்மையிலேயே அப்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தபடி விளையாடினேன்.

மேலும் டிராவிட்டிடம் இருந்தும் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது அவருடன் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். அவர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். அவரைப் போன்ற ஒரு மாபெரும் வீரரிடம் நான் பயிற்சி பெற்றது மூலம் பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்