சோக்கர் என்று சொல்லி விராட் கோலியை 'ஸ்லெட்ஜிங்' செய்ய வேண்டும் - இங். முன்னாள் வீரர்

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற விராட் கோலியை விரைவில் அவுட்டாக்க வேண்டும் என மான்டி பனேசர் கூறியுள்ளார்.

Update: 2024-01-21 04:05 GMT

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு பின் சொந்த மண்ணில் இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காத இந்தியா தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012-ல் நடந்ததுபோல் இம்முறையும் இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்த அதன் முதுகெலும்பு பேட்ஸ்மேனான விராட் கோலியை இங்கிலாந்து விரைவில் அவுட்டாக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். அதற்கு ஐசிசி தொடர்களில் தொடர்ந்து இந்தியா தோல்வியை சந்தித்து வருவதை காரணமாக வைத்து சோக்கர் என்று சொல்லி விராட் கோலியை இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"அவருடைய ஈகோவுடன் விளையாடி மனதளவில் அவரை சிக்க வையுங்கள். அத்துடன் ஐசிசி நாக் அவுட் என்று வரும்போது நீங்கள் சோக்கர்கள் என்பது போன்றவற்றையும் அவரிடம் இங்கிலாந்து வீரர்கள் சொல்ல வேண்டும். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஏதாவது சொல்லி விராட் கோலியிடம் ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டும். ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி வென்றதில்லை. அப்படி சொல்வது விராட் கோலியை மனதளவில் காயப்படுத்தி அவருடைய மன உறுதியை குறைக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்