கோலியின் ஓட்டல் அறையை வீடியோ எடுத்த ஊழியர்கள் பணிநீக்கம்- மன்னிப்பு கேட்ட ஓட்டல் நிர்வாகம்

கோலியின் ஓட்டல் அறை வீடியோவை வெளியிட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-31 13:48 GMT

பிரிஸ்மேன்,

டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்னாப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஓட்டல் அறையில் தங்கி உள்ளனர்.

இந்த ஓட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் கோலி இல்லாத நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவரின் அறையை வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோவால் ஆத்திரமும், அதிருப்தியும் அடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து வீடியோ எடுத்த நபருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், " ஓட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு சுதந்திரம் கிடைக்கும். என் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி அறையின் வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தான் எங்களின் முதன்மையான முன்னுரிமை. இந்த சம்பவத்தால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். சம்பந்தப்பட்ட விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பிரச்சனையை சரிசெய்ய நாங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் நாங்கள் எங்கள் மன்னிப்புகளை தெரிவித்து கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்