மும்பைக்கு எதிரான வெற்றி எங்கள் அணி வீரர்களையே சாரும் - சஞ்சு சாம்சன்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன்.அவர் மிகவும் நம்பிக்கையான வீரர் என சாம்சன் கூறினார்.

Update: 2024-04-23 08:25 GMT

Image Courtesy: X (Twitter) 

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான அனைத்து வாழ்த்துகளும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களையுமே சேரும். பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மிடில் ஓவர்களில் இடது கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திவிட்டனர். ஆனால் நாங்கள் திரும்பி வந்ததுடன் இந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளோம்.

நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது மைதானம் மெதுவாக இருந்தாலும், விளக்குகளின் வெளிச்சத்தால் விளையாடும் போது அது பேட்டிங்கிற்கு சாதமாக அமைந்தது. தொழில்முறை வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்