எதிரணி பேட்ஸ்மேன் 100 மீட்டர் சிக்சர் அடித்தபோது தோனி என்னிடம் கூறியது இதுதான் - தேஷ்பாண்டே
ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் கொடுத்தபோது தவறு உன் மீதில்லை என்று தோனி ஆதரவு கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களை வளர்த்த பெருமைக்குரியவர்.
இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக 3.2 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தபோது தவறு உன் மீதில்லை என்று தோனி ஆதரவு கொடுத்ததாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "அப்போட்டியில் மஹி பாய் என்னிடம் வந்து நீ எந்த தவறும் செய்யவில்லை. நல்ல பந்துகளையே வீசினாய். இன்றைய நாள் உனக்கானதல்ல என்று சொன்னார். அடுத்த போட்டியிலும் அதே போல் வீசியபோது மீண்டும் தோனி அப்படியே சொன்னார். ஆனால் மற்றொரு போட்டியில் நான் நல்ல யார்க்கர் பந்துகளை வீசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென தேவையின்றி வீசிய பவுன்சர் பந்தில் எதிரணி பேட்ஸ்மேன் 100 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
அப்போது தோனி என்னிடம் ஏன் பவுன்சர் போட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு பேட்ஸ்மேன் யார்க்கரை எதிர்பார்ப்பார் என்பதால் பவுன்சர் போட்டதாக அவரிடம் சொன்னேன். அதற்கு கிரிக்கெட்டை மனதில் விளையாடாதீர்கள் என்று சொன்ன தோனி'யார்க்கர் யார்க்கர் தான்' அதை யாராலும் அடிக்க முடியாது எனக் கூறினார். மேலும் நிகழ்காலத்தில் இல்லாமல் முன்னோக்கி விளையாட முயற்சிக்குமாறு சொன்ன தோனி பிட்னஸில் கவனம் செலுத்துமாறு சொன்னார்" என்று கூறினார்.