இந்த சீசன் முழுவதும் நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - ஹர்திக் பாண்ட்யா
நடப்பு ஐ.பி.எல். தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமாக நிறைவு செய்தது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் குவித்தார்.
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமாக இந்த சீசனை நிறைவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், " உண்மையிலேயே இந்த தோல்வி மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. இந்த சீசன் முழுவதுமே நாங்கள் தோல்வியை சந்திக்க எங்களின் மோசமான ஆட்டம்தான் காரணம்.
தற்போதைய கிரிக்கெட் ஒரு தொழில் முறையான கிரிக்கெட். இங்கு நாம் வெற்றி பெற வேண்டுமெனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ஒருவேளை ஒரு குழுவாக நம்மால் ஒரு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் நிச்சயம் இதுபோன்ற தோல்வியை சந்திக்கத்தான் வேண்டும். இந்த தோல்வி எங்கு ஏற்பட்டது என்று குறிப்பிட்டு காட்டுவது இயலாத ஒன்று இருப்பினும் அனைத்தும் எங்கள் வழியில் செல்லவில்லை" என்று கூறினார்.