அவர்களும் மனிதர்கள்தான், ரோபோக்கள் அல்ல - இங்கிலாந்து அணிக்கு ஆதரவு தெரிவித்த குக்

இங்கிலாந்து அணியை ஆதரித்து அலெஸ்டர் குக் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-09 07:18 GMT

தர்மசாலா,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சொன்னதை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா அபார கம்பேக் கொடுத்தது. அதனால் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மேலும் சொந்த மண்ணில் 2012-க்கு பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் சாதனையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மறுபுறம் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடத் தவறிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணியில் அவர்கள் இழந்த முதல் தொடராகவும் இது அமைந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்து அணியை ஆதரித்து அலெஸ்டர் குக் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:-

'இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு தோல்வியின்போதும் ஊடகங்கள் மோசமான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் இங்கிலாந்தின் மோசமான செயல்பாட்டை பாதுகாக்க நினைக்கவில்லை. ஆனால் உண்மையில் இது ஒரு மோசமான தொடராக அமைந்துள்ளது.

அவர்களும் மனிதர்கள்தான், ரோபோக்கள் அல்ல, தவறு நடக்கத்தான் செய்யும். அவர்கள் எட்டு வாரங்களாக வீட்டில் இருந்து விலகி விளையாடி வருகின்றனர். இந்த மோசமான தோல்வியால் வீரர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நாம் போட்டியின் எமோஷனை புரிந்து கொள்வதில்லை. வீட்டிலிருந்து டீ சாப்பிட்டுக்கொண்டு எளிதாக விமர்சித்து விடுகிறோம். ஆனால் அவர்களின் நிலையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்தையும் மறந்து வீடு வாருங்கள் நாம் மீண்டும் பலமாக எழுவோம்' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்