ஐ.சி.சி. தலைவராக என்னுடைய முதல் இலக்கு இதுதான் - ஜெய்ஷா

ஐ.சி.சி.-ன் புதிய தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-29 07:22 GMT

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதே தம்முடைய முதல் வேலை என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகள் ஆதிக்கம் செலுத்தும் நவீன யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.சி.சி.-ன் இந்த மதிப்பு மிக்க பொறுப்பை ஏற்க என் மீது நம்பிக்கை வைத்த உறுப்பினர் வாரியங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் விளையாட்டின் தரத்தை உயர்த்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த முக்கிய பாத்திரத்தில் நான் அடி எடுத்து வைக்கும்போது உங்களின் அதிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் அழகான கிரிக்கெட்டுக்கும் என்னை அர்ப்பணிப்பதற்கும் உறுதியாக இருக்கிறேன்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாம் ஒரு உருமாறும் சகாப்தத்தின் உச்சத்தில் நிற்கிறோம். இந்த தருணம் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்த அற்புதமான விளையாட்டில் நாம் அனைவருக்குமான தெளிவான அழைப்பு. இது போன்ற அற்புதமான காலகட்டத்தில் ஐ.சி.சி.-ஐ வழி நடத்துவது எனது பாக்கியம்.

எனது பதவி காலத்தில் திறமையானவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான தனித்திட்டத்தை அமைப்பதற்கு உழைக்க விரும்புகிறேன். இந்த திட்டத்தில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். டி20 இயற்கையாகவே பரபரப்பான வடிவமாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமாகும். வீர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை செய்வதே நம்முடைய இலக்கு" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்