மும்பை அணியின் போராட்டம் வீண்...10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது

Update: 2024-04-27 14:20 GMT

புதுடெல்லி,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் பிரேசர் மெக்கர்க் - அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். இதில் தொடக்கம் முதல் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதம் விளாசி அசத்தினார். அரைசதம் கடந்த பிறகும் அதிரடியை விடாமல் மும்பை அணியின் பந்துவீச்சை ஜேக் பிரேசர் துவம்சம் செய்தார்.தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 84 ரன்கள் (11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய அபிஷேக் போரல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் ரிஷப் பண்ட் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. ஸ்டப்ஸ் 48 ரன்களும் , பண்ட் 29 ரன்களும் , எடுத்தனர்.தொடர்ந்து 258 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்களிலும் , இஷான் கிஷன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா , திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் டிம் டேவிட் அதிரடி காட்டி 17 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் கடைசி வரை போராடிய திலக் வர்மா 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Tags:    

மேலும் செய்திகள்