'2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை அந்த பந்து வீச்சாளருக்கே கொடுத்திருக்க வேண்டும்'-கவுதம் கம்பீர்
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தன்னையும் தோனியையும் விட பந்து வீச்சில் அசத்திய ஜாகீர் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.;
புது டெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் நிலைத்து விளையாடிய கவுதம் கம்பீருடன் சேர்ந்த கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக முரளிதரனை எதிர்கொள்வதற்காக யுவராஜ்-க்கு முன்பே களமிறங்கிய அவர் தொடர் முழுவதும் தடுமாறிய போதிலும் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் எடுத்த தம்மையும் 91 ரன்கள் எடுத்த தோனியையும் விட பந்து வீச்சில் அசத்திய ஜாகீர் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. ஆனால் ஜாகீர் கான் தான் அப்போட்டியின் உண்மையான நாயகன் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை அந்த போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் இலங்கை 350 ரன்கள் அடித்திருக்கும். ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மாறாக என்னுடைய இன்னிங்ஸ் மற்றும் தோனியின் சிக்ஸர் பற்றி மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். இருப்பினும் ஜாகீர் தான் இறுதிப்போட்டியின் நாயகன்'' என்று கூறினார்.
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தன்னுடைய முதல் 5 ஓவர்களில் 3 மெய்டன் வீசிய ஜாகீர் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இலங்கையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினார். அத்துடன் 2011 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராகவும் ஜாகீர் சாதனை படைத்து வெற்றியில் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.