'ஆடுகளத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது' - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்
முதல் பாதியிலேயே பனியின் தாக்கத்தை பார்க்க முடிந்தது என ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் (60 ரன்கள்), கேப்டன் ஷிகர் தவான் (86 ரன்கள்) அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களில் போராடி அடங்கியது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கருத்து தெரிவிக்கையில், 'உண்மையிலேயே இது பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமாக இருந்தது. பஞ்சாப் அணியினர் அதிரடி தொடக்கம் கண்டாலும் எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி கடைசியில் கட்டுப்படுத்தினர். பீல்டிங் செய்கையில் ஜோஸ் பட்லருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதால் அதற்கு தையல் போடப்பட்டது.
இதனால் அவரால் தொடக்க வீரராக களம் காண முடியவில்லை. அவருக்கு பதிலாக தொடக்க வீரராக அஸ்வினை களம் இறக்கினோம். தேவ்தத் படிக்கலை தொடக்க வீரராக இறக்கலாம் என்று யோசித்தோம். ஆனால் எதிரணியிடம் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் தேவ்தத் படிக்கலை மிடில் ஓவர்களில் பயன்படுத்தலாம் என்று விட்டுவிட்டோம்.
2-வது பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் பாதியிலேயே பனியின் தாக்கத்தை பார்க்க முடிந்தது. அடுத்த முறை இங்கு விளையாடும் போது இதனை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்' என்றார்.