கடைசி ஓவரின் 5-வது பந்தில் டிரெண்ட் போல்ட்டிடம் கூறிய வார்த்தை அதுதான் - ஹெட்மயர் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Update: 2024-04-14 04:28 GMT

image courtesy: IPL

சண்டிகர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் கேஷவ் மகராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் 39 ரன்களும், தனுஷ் கோட்டியான் 24 ரன்களும் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23, துருவ் ஜுரேல் 6, ரோவ்மன் பவ்வல் 11 ரன்களில் அவுட்டானதால் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சிம்ரோன் ஹெட்மயர் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது 2 சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த வகையில் 27 (10 பந்துகள்) ரன்கள் அடித்து பினிஷிங் செய்த அவர் 19.5 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 27 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சிம்ரோன் ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 5வது பந்தில் 2 ரன் தேவைப்பட்டபோது ஒருவேளை தம்மால் சிக்சர் அடிக்க முடியாவிட்டாலும் சிங்கிள் எடுத்து எப்படியாவது போட்டியை சமன் செய்துவிடலாம் என்று எதிரே இருந்த டிரெண்ட் போல்ட்டிடம் சொன்னதாக ஹெட்மயர் கூறியுள்ளார். ஆனால் கடைசியில் அதே பந்தில் தாம் சிக்சர் அடித்ததால் சூப்பர் ஓவருக்கு அவசியமின்றி போட்டி முடிந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"முடிந்தளவுக்கு வலைப்பயிற்சியில் நான் பயிற்சி செய்கிறேன்.  எனவே சிக்சர்களை அடிப்பதற்கு என்னால் முடிந்தளவுக்கு நான் முயற்சிக்கிறேன். அதைப் பயன்படுத்தி இன்று என்னுடைய அணியை வெற்றி பெற வைத்ததில் மகிழ்ச்சி. கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் எதிரணி கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின் நான் முடிந்தளவுக்கு தெளிவாக அடித்தேன். போல்ட்டிடம் பேசியபோது அவர் நிலைமையை புரிந்து கொண்டதாக என்னிடம் சொன்னார். அப்போது ஒருவேளை நம்மால் போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சமன் செய்வோம் என்று அவரிடம் 5-வது பந்துக்கு முன் சொன்னேன். குடும்பத்தை விட்டு தூரத்தில் இருக்கும் இந்த சமயத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்