எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்த அவர்களுக்கு நன்றி - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டி முடிந்த பின் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்று ஆரம்பம் முதலே நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பந்தை சரியாக பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிப்பதில் உறுதியாக இருந்தேன். இதுவரை என்ன செய்தேனோ அதை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன்.
அதை தவிர்த்து என்னுடைய மனதில் வேறு ஒன்றுமில்லை. கடினமான நேரத்தில் என்னை வழி நடத்திய விதத்திற்காக என்னுடைய சீனியர்களுக்கு உண்மையாக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக சங்கா சார், சஞ்சு பாய் ஆகியோர் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தனர். அதை பயன்படுத்தி வலைப்பயிற்சியிலும் களத்திலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.