'நன்றி சுப்மன் கில்'- கெவின் பீட்டர்சன் பாராட்டி பதிவு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.

Update: 2024-02-05 08:29 GMT

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா. தற்போது இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.

முன்னதாக சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் தடுமாறி வருவதால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தென்னாப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் கூட முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் 22 என்ற சுமாரான சராசரியில் தடுமாறினாலும் நாளடைவில் ஜாம்பவானாக உருவெடுத்ததாக கெவின் பீட்டர்சன் கூறினார். அதேபோல சுப்மன் கில்லும் விரைவில் அசத்துவார் என்பதால் அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று ஆதரவு தெரிவித்தார்.

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சுமாராக விளையாடிய கில் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் குவித்தார். அதனால் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் இரண்டாவது போட்டியில் 399 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்தியா நிர்ணயிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஓரளவு பார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தம்முடைய கணிப்பை பொய்யாக்காமல் ஆதரவை நியாயப்படுத்தும் வகையில் சதமடித்துள்ள அவருக்கு "நன்றி சுப்மன் கில்" என்று பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பீட்டர்சன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்