இந்திய அணியில் சாம்சனை விட ரிஷப் பண்டுக்கு முன்னுரிமை - யுவராஜ்சிங் யோசனை

இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரக்கூடிய அபரிமிதமான திறமை ரிஷப் பண்டிடம் இருப்பதாக யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-22 20:22 GMT

துபாய்,

20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 5-ந்தேதி அயர்லாந்தை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஆடும் லெவனில் யார்-யார் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்பதை இந்திய முன்னாள் வீரரும், உலகக் போட்டிக்கான தூதருமான யுவராஜ்சிங் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ' கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வேண்டும். 3-வது வரிசையில் விராட் கோலி ஆட வேண்டும். அது தான் அவருக்கு உகந்த வரிசை. 4-வது வரிசையில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார். இதற்கு அடுத்த வரிசையில் ஆடுவதற்கான வாய்ப்பில் சில வீரர்கள் இருக்கிறார்கள். இந்த வரிசையில் இரண்டு இடக்கை- வலக்கை பேட்ஸ்மேன் கூட்டணி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். இவ்வாறு மாறுபட்ட ஸ்டைலில் ஆடும் போது அவர்களுக்கு பந்து வீசுவதற்கு பவுலர்கள் சிரமப்படுவார்கள்.

விக்கெட் கீப்பர் இடத்திற்கு எனது தேர்வில் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிப்பேன். சாம்சனும் சூப்பர் பார்மில் உள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் ஒரு இடக்கை பேட்ஸ்மேன். இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரக்கூடிய அபரிமிதமான திறமை அவரிடம் இருப்பதாக நம்புகிறேன். ஏற்கனவே இதை செய்து காட்டியிருக்கிறார். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை தேர்வு செய்தது அருமையான முடிவு. ஐ.பி.எல். பார்மை மட்டும் பார்க்காமல் அவர்கள் சர்வதேச போட்டியில் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் தேர்வு குழுவினர் கவனத்தில் கொண்டுள்ளனர்.

பாண்ட்யா இந்த முறை ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடியுள்ளார். அவரது பந்து வீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. அதே நேரத்தில் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம். இந்த உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். எனது பார்வையில் ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங் ஆகியோரும் அணியில் உள்ளனர். நமது பந்து வீச்சை பார்க்க வலுவாக தெரிகிறது. ஆனால் அதை களத்தில் நிரூபித்தாக வேண்டும், ரிங்கு சிங், சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்