டி20 உலகக்கோப்பை: ராகுல், பண்ட், சாம்சன் ஆகியோரில் யார் விக்கெட் கீப்பர்..? சித்து தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Update: 2024-04-28 09:08 GMT

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது.

இதற்கிடையே தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் போன்ற வீரர்களும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு போட்டியிட்டு வருகின்றனர். இதில் இஷான் கிஷன் மும்பை அணியில் தொடர்ந்து பெரிய ரன்கள் எடுக்காததால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம். அதேபோல தினேஷ் கார்த்திக் ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் இம்முறை தேர்வுக்குழு நம்பி அவரை இந்தியாவுக்காக தேர்வு செய்வதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஆனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 385 ரன்கள் விளாசி நல்ல பார்மில் இருக்கிறார். அதேபோல காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணியின் கேப்டனாக மிரட்டி வரும் ரிஷப் பண்ட் 371 ரன்கள் குவித்து 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். அத்துடன் லக்னோ அணியில் கேப்டனாக விளையாடி வரும் கே.எல். ராகுல் 9 போட்டிகளில் 378 ரன்கள் குவித்து தன்னுடைய தரத்தை காண்பித்து வருகிறார். எனவே இந்த 3 பேருக்கு டி20 உலகக்கோப்பை அணியில் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தம்மை பொறுத்த வரை சஞ்சு சாம்சன்தான் இந்தியாவுக்காக விளையாடத் தகுதியான முதல் விக்கெட் கீப்பர் என்று நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நம்பர் 1 இடத்தில் சஞ்சு சாம்சன். ஏனெனில் நல்ல பார்மில் இருக்கும் அவரிடம் இப்போது நல்ல வித்தியாசம் தெரிகிறது. அதேபோல இந்தியாவுக்கு பேக்-அப் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அல்லது 4, 5-வது இடத்தில் விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டால் கே.எல். ராகுலை தேர்ந்தெடுக்கலாம். அவரும் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஆனால் நான் சாம்சனை முதலாவதாக தேர்ந்தெடுப்பேன். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் இருப்பார். காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவரை நீங்கள் தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரராக பார்க்கிறீர்களா? அவருடைய பார்ம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும் சோதனைகளில் தேர்ச்சி பெற்று வருகிறார். எனவே இந்த 3 வீரர்களையும் நீங்கள் கணக்கில் வைக்கலாம். ஒருவேளை பி.சி.சி.ஐ. தண்டனை கொடுக்காமல் போயிருந்தால் நான் இஷான் கிஷனையும் தேர்வில் வைத்திருப்பேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்