டி20 உலகக்கோப்பை; சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இத்தனை கோடிகளா..? - பரிசுத்தொகையை அறிவித்த ஐ.சி.சி

இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-03 15:27 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான முழு பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 93.50 கோடி ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 20 கோடியே 36 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடியே 63 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 7, 87,500 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 54 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 3,82,500 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 17 லட்சம் ரூபாய்) வழங்கப்பட உள்ளது. மேலும், 9 முதல் 12 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,47,500 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 5 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

மேலும், 13 முதல் 20 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 2,25,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இது மட்டுமில்லாமல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை தவிர்த்து மற்ற சுற்று ஆட்டங்களில் (லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று) ஒரு போட்டியை வென்றால் ஒவ்வொரு அணிக்கும் தலா 31,154 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்