டி20 உலகக்கோப்பை: ஓமன் அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி

13.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து .

Update: 2024-06-09 21:04 GMT

அண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அண்டிகுவாவில்நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரதிக் அத்வாலே, நசீம் களமிறங்கினர். நசீம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் இலியாஸ் 16 ரன்களிலும், மசூத் 3 ரன்னிலும், கலித் கலி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்க வீரர் அத்வாலே பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஆயன் கான் 41 ரன்கள் எடுத்தார்.இறுதியில் ஓமன் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அந்த அணியின் ஷெரிப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி , மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களமிறங்கினர். ஜோன்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிராண்டன் மெக்முல்லன் களமிறங்கினார். ஜார்ஜ் முன்சி, மெக்முல்லன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இருவரும்இணைந்து பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் முன்சி 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மெக்முல்லன் அரைசதமடித்தார். இதனால் 13.1 ஓவர்களில் ஸ்காட்லாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.மெக்முல்லன் 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்