டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எத்தனை பயிற்சி ஆட்டம்..? வெளியான தகவல்
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெ ற்றுள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் 2 கட்டங்களாக பயணிக்க உள்ளனர். இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் நடந்து வருவதால் அதில் லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளில் உள்ள வீரர்கள் முதற்கட்டமாகவும், மீதமுள்ள வீரர்கள் தொடர் நிறைவடைந்ததும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
இந்நிலையில் டி20 உலக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டுமே விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் இந்திய அணிக்கு 2 பயிற்சி போட்டிகள் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டிருந்தது. ஒன்றை நியூயார்க்கிலும் மற்றொன்றை புளோரிடாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தது. இருப்பினும் பி.சி.சி.ஐ. நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஒரே ஒரு பயிற்சி போட்டியில் மட்டுமே விளையாட சம்மதித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ள அணி குறித்தோ, போட்டி நடைபெற உள்ள நாள் குறித்தோ எந்த வித தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.