டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு இவர் தான் தகுதியானவர் - ரிக்கி பாண்டிங் கருத்து
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.;
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதுவரை அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோர் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.
கடந்த இரு ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை அவரது அதிரடி ஆட்டத்திற்காக மட்டுமின்றி அவரது அனுபவத்திற்காகவும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தம்மை பொறுத்த வரை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு சரியானவர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலகக் கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேனா? எனக் கேட்டால் கண்டிப்பாக நம்புகிறேன். ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வெளியாக உள்ள டி20 உலகக் கோப்பை அணியில் அவர் இருப்பதற்கு தகுதியானவர்.
கடந்த 6 ஐ.பி.எல் தொடர்களை விட அவர் தற்போது எப்படி விளையாடுகிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் அதிகமான ஆழம் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தற்போது சில வீரர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். இஷான் கிஷன் நன்றாக விளையாடுகிறார். சாம்சன், கே.எல். ராகுல் ஆகியோரும் அசத்தலாக விளையாடுகின்றனர்.
எனவே விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய உங்களுக்கு நிறைய தேர்வுகள் தயாராக இருக்கிறது. ஆனால் நான் அணியைத் தேர்வு செய்பவராக இருந்தால் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக அசத்தும் பட்சத்தில் ரிஷப் பண்ட் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.