சன்ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர் - சஞ்சு சாம்சன்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-03 06:22 GMT

Image Courtesy: X (Twitter)

ஐதராபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. இந்த சீசன் முழுவதுமே இது போன்ற சில அற்புதமான போட்டிகளை நாங்கள் சந்தித்துள்ளோம். சன்ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து எங்களை தோற்கடித்தனர்.

ஐ.பி.எல் போட்டிகளில் மிகக் குறைந்த மார்ஜினில் நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளோம். எப்போதுமே ஒரு போட்டி முழுவதுமாக முடிந்தால் தான் அது முற்றுப்பெறும். இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. புதியப்பந்தில் விளையாடுவது சற்று கடினமாக இருந்தது. பின்னர் பந்து பழையதாக மாற மாற பேட்டுக்கு எளிதாக வந்தது.

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஆனால் பட்லரும், நானும் பவர்பிளேவின் போதே ஆட்டமிழந்ததால் எதிரணி ஆரம்பத்திலேயே உத்வேகத்தை பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்