விராட் கோலி குறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு அந்த வீரர் அசத்துவதை... - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றை இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.
முன்னதாக நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் அசத்தவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் 24 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தார்.
எனவே அவரை மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்பது பல ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் இந்திய அணியை பற்றி யோசிக்குமாறு தெரிவிக்கும் அவர் ஜஸ்ப்ரித் பும்ரா அசத்துவதை பார்க்குமாறும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி பார்மில் இருக்கிறாரா இல்லையா என்பதை பற்றி யோசிக்காமல் நாம் இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல் ஜஸ்ப்ரித் பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார்.
அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார். உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.