கவுதம் கம்பீருக்கு வெற்று காசோலை கொடுத்த ஷாருக் கான்... எதற்காக?

கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக்குவதற்கான முயற்சிகளை பி.சி.சி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளது.

Update: 2024-05-26 14:21 GMT

புதுடெல்லி,

ஐ.பி.எல். 2024 போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இந்நிலையில் கம்பீருக்கு, அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக் கான் வெற்று காசோலை ஒன்றை கொடுத்த விவரம் வெளிவந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கம்பீர் இருந்தபோது, அவருக்கு இந்த வாய்ப்பு வந்தது. இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொல்கத்தா அணியில் கம்பீர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அதற்கான நோக்கம்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட கம்பீருக்கு அதிக ஆர்வம் உள்ளது என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், அவர் நிபந்தனை ஒன்றையும் வைத்திருக்கிறார். இதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால், பதவி நிச்சயம் என 100 சதவீதம் உத்தரவாதம் அவசியம் என அவர் விரும்புகிறார்.

அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் பலரில் ஒருவராக கம்பீரை பி.சி.சி.ஐ. பார்க்கும் என்றால், அதற்கு விண்ணப்பிக்க போவதில்லை என கம்பீர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் சிலர் பின்வாங்கிய நிலையில், கம்பீரை ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியை பி.சி.சி.ஐ. தீவிரப்படுத்தி வரும் சூழல் காணப்படுகிறது. ஆனால், அவரை நீண்ட காலத்திற்கு அணியில் தக்க வைக்க ஷாருக் கான் எண்ணுகிறார்.

இதற்கு முன் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் ராகுல் டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகளை மறுத்து விட்டனர் என தகவல் வெளியானது.

ஆனால், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா இதனை மறுத்திருக்கிறார். பயிற்சியாளர் பதவிக்கு வரும்படி எந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடமும் கேட்கவில்லை என கூறினார். இதுபோன்ற ஊடக செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் கூறினார்.

ஆனால், கொல்கத்தா அணியை விட்டு விலகுவது பற்றி ஷாருக் கானிடம், கம்பீர் என்ன பேசியுள்ளார் என்பதே அவர் இதில் ஒரு முடிவு எடுப்பதற்கான பெரிய அடிப்படை காரணியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்