கபில்தேவ், எம்.எஸ்.தோனியுடன் ரோகித் சர்மாவும் இணைந்து விட்டார் - கவாஸ்கர் பாராட்டு

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

Update: 2024-07-07 12:13 GMT

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. ஐசிசி தொடர்களில் கடந்த 10 வருடங்களாக இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் அந்த தொடர் தோல்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதின் மூலம் ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவுக்கு கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்களின் வரிசையில் ஜாம்பவான்கள் கபில்தேவ், எம்.எஸ்.தோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள். இருப்பினும் இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற கபில்தேவ், எம்எஸ் தோனி போலவே ரோகித் சர்மாவும் மக்களின் கேப்டனாக உருவெடுத்துள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

"இந்தியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்ற கபில்தேவ் மற்றும் தோனி ஆகிய 2 மகத்தான கேப்டன்களுடன் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். அந்த இருவரையும் போலவே ரோகித் சர்மாவும் மக்களின் கேப்டன். இந்திய அணி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களால் அவர் விரும்பப்படுகிறார். அவருடைய கேப்டன்ஷிப் மற்றும் நுணுக்கங்கள் ஆகியவை ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. அவருடைய சில முடிவுகள் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் கடைசியில் அதுதான் அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தருணமாக அமையும்.

அணியை முன்னின்று வழி நடத்திய அவர் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு முறையும் அணிக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். எனவே அவரை கேப்டனாக பெறுவதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதேபோல வீரர்கள் இயற்கையாக தங்களுடைய ஆட்டத்தால் பாராட்டுகளையும் வெளிச்சத்தையும் பெறுகின்றனர். ஆனால் வெற்றிக்கு பயிற்சியாளர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் ராகுல் டிராவிட் இந்த வெற்றியில் மிகப்பெரிய வேலை செய்துள்ளார். ரோகித் - ராகுல் காம்பினேஷன் இத்தொடரில் அற்புதமாக செயல்பட்டது. அவர்கள் கொஞ்சமும் சுயநலமின்றி அணியின் நலனுக்காக இந்தியாவுக்காக அனைத்தையும் செய்தனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்