ரோகித் சர்மா தம்முடைய இடத்தை கில்லுக்கு தியாகம் செய்ய வேண்டும் - வாசிம் ஜாபர்
சுப்மன் கில் 3-வது இடத்தில் விளையாடுவதை விட தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இரண்டாவது இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். எனவே அவரை நீக்கி விட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தரமான சுப்மன் கில் 3-வது இடத்தில் விளையாடுவதை விட தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். எனவே நீக்குவதற்கு பதிலாக ரோகித் சர்மா தம்முடைய ஓப்பனிங் இடத்தை அவருக்கு தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-
"என்னை பொறுத்த வரை கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் 2-வது போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். ரோகித் சர்மா 3வது இடத்தில் விளையாட வேண்டும். பேட்டிங் செய்வதற்காக காத்திருப்பது கில்லுக்கு உதவாது. எனவே அவர் தொடக்க வீரராக களமிறங்குவது சிறந்த முடிவாக இருக்கும். மறுபுறம் ரோகித் சர்மா சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர். எனவே 3-வது இடத்தில் விளையாடுவது அவருக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது' என்று பதிவிட்டுள்ளார்.