ரோகித் சர்மா ஆரஞ்சு தொப்பியை வெல்ல கூட வாய்ப்பு உள்ளது - ஸ்ரீசாந்த்

என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார்.

Update: 2024-04-06 05:09 GMT

Image Courtesy: @mipaltan

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் எனவும், சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் மஹி பாயின் கீழ் (எம்.எஸ். தோனி) விளையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். உலகக் கோப்பையையும் வென்றுள்ளோம். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள்.

ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.. நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.

அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார். மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார்.

கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார். ரோகித் அதிரடியை காண காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்