ரோகித் எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் - ரிங்கு சிங்
டி20 உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்காதது பற்றி ரோகித் சர்மா தம்மிடம் பேசியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வரும் ரிங்கு சிங், அறிமுகம் ஆன முதலே அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
அதனால் டி20 உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாட ரிங்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்ந்தெடுத்தது. அதனால் ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர்.
அப்போது எந்த தவறும் செய்யாத ரிங்கு சிங்கை 11 வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் தேர்ந்தெடுக்கவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்காதது பற்றி கேப்டன் ரோகித் சர்மா தம்மிடம் பேசியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். அப்போது ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ஒருமுறை டி20 உலகக்கோப்பை நடைபெறுவதால் அடுத்த முறை உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று ரோகித் வாக்குறுதி கொடுத்ததாகவும் ரிங்கு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் என்னிடம் வந்து நிலைமைகளை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அவர் என்னிடம், 'நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் இன்னும் நிறைய உலகக்கோப்பை வருங்காலங்களில் வரும். எனவே அதில் விளையாட கடினமாக உழைத்துக் கொண்டிருங்கள். ஏமாற்றமடையாமல் 2 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்'. ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை நான் விரும்புகிறேன். அதே போல விராட் கோலியும் எனக்கு பிடிக்கும். ஏனெனில் அணியை வழி நடத்துவதற்கு அதிரடியும் ஆக்ரோஷமும் அவசியம். எனவே அதைக் கொண்டிருந்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது" என்று கூறினார்.