விபத்துக்குப் பிறகு முதல்முறையாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் ..! வைரல் வீடியோ
விரைவில் பண்ட் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி டேராடூன் அருகே நடந்த பயங்கரமான கார் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பினார். கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த விபத்து காரணமாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் உள்ளிட்ட எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஆடாமல் ஓய்வில் இருந்து குணமடைந்து வருகிறார்.
இந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் பண்ட் தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். பயிற்சி போட்டி ஒன்றில் களமிறங்கி விளையாடிய ரிஷப் பண்ட் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார் .இதனால் விரைவில் பண்ட் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.