ஆர்.சி.பி. அணியின் பிரச்சினையே இதுதான் - பயிற்சியாளர்
ஆர்.சி.பி. அணியில் விராட் கோலியை தவிர்த்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பார்மில் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி 67 பந்துகளில் சதமடித்தும், ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்த நிலையிலும், அடுத்தடுத்து அதிரடியாக விளையாட முடியாமல் தவித்தது. .
இதனால் 2வது பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி எளிதாக 19.1 ஓவர்களில் 189 ரன்களை அடித்து அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பட்லர் 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் காரணமாக ஆர்.சி.பி. அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து ஆர்.சி.பி. அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் பேசுகையில், " நாங்கள் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். டி20 கிரிக்கெட்டை புரிந்து கொள்வதற்கான வழியும் அதுதான். இதுபோன்ற பிட்ச்களில் ஆக்ரோஷமாக விளையாடுவதன் மூலமாகவே எதிரணியை பிரஷரில் போட முடியும். எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் விராட் கோலியை தவிர்த்து எந்த வீரரும் இன்னும் பார்முக்கு வரவில்லை.
நிச்சயம் இப்படி இருப்பது கடினமாக உள்ளது. அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் போட்டியில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் 12-வது ஓவரின்போது விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்திருந்தோம். அடுத்த 8 ஓவர்களில் 200 ரன்களை எட்டியிருக்க முடியும். ஆனால் செய்ய முடியவில்லை. அதேபோல் பவர் பிளேவின் கடைசி ஓவரில் சில ரன்களை விட்டுக் கொடுத்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
விராட் கோலியை பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி 316 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலிக்கு பின் ஆர்.சி.பி. அணியில் அதிக ரன்கள் குவித்தது டு பிளஸ்சிஸ்தான். அவர் 5 போட்டிகளில் 109 ரன்களை சேர்த்துள்ளார். இதுதான் ஆர்சிபி அணியில் முக்கியமான பிரச்சனை. வீரர்களின் நம்பிக்கை சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது" என்று கூறினார்.